‘தமிழகத்தில் மழை நீடிக்கும்’: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

15 January 2021, 7:20 am
rain - updatenews360
Quick Share

சென்னை: குமரிக்கடலை ஒட்டி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 12ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 16ம் தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலையாக இருப்பதால் இன்று தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 17ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 8

0

0