சூதாட்டத்தில் காவலர்கள் ஈடுபடக்கூடாது: காவல் ஆணையர் எச்சரிக்கை!!!

Author: Udhayakumar Raman
10 September 2021, 9:24 pm
Quick Share

சென்னை: சென்னையில் பணிபுரியும் காவலர்கள் பணியின் போது மற்றும் ஓய்வு சமயத்திலும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வேலுச்சாமி என்ற காவலர் ஆன்லைன் ரம்மியில் ஏழு லட்சம் பணம் இழந்ததால், கடன் தொல்லை ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். துப்பாக்கி குண்டு மூளையை துளைக்காததால் நூலிழையில் உயிர் தப்பிய, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவலார் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது. காவலர்களின் இந்த செயலால் அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் உட்பட குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். காவலர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இப்படி நடந்தால் காவல்துறை நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 121

0

0