அரசு அதிகாரிகளுக்கு 24 மணிநேரமும் வேலை.. வடகிழக்கு பருவமழையால் பறக்கும் உத்தரவுகள்!

Author: Hariharasudhan
14 October 2024, 12:45 pm

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.14) மஞ்சள் அலர்ட், நாளை (அக்.15) ஆரஞ்சு அலர்ட், நாளை மறுநாள் (அக்.16) சிவப்பு அலர்ட் மற்றும் வியாழக்கிழமை (அக்.17) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்தம் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் மீட்பு பணிகளுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக மழைப்பொழிவு குறைந்துவிடும் என்றும், மீண்டும் தீபாவளி முடிந்த பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழ்நாடு மாநில அவசரக் கட்டுபாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் நேரடி தொடர்பில் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், திருநெல்வேலியில் இருந்து தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படை சென்னை விரைகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில், மேலும் 6 குழுக்கள் சென்னை செல்கின்றன.

இதைத் தவிர்த்து, திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள் மற்றும் மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், இந்தக் குழுவிற்கு தலா 25 வீரர்கள் விதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடிக்குது மழை.. தயார் நிலையில் மீட்புப் படையினர்!

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இதில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முக்கியமாக, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், தமிழகம் முழுவதும் மழைக்கால பணிகளுக்காக அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள் முழுமையாக பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தீயணைப்பு வாகனங்கள், மீட்பு உபகரணங்களில் பழுது ஆகியவற்றை நீக்கப்பட்டு முழு செயல்திறனுடன் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை மாநகரில் 50 இடங்களில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார். முக்கியமாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் பணியில் மாநகராட்சி ஆணையிட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கனமழையை எதிர்கொள்ள 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. அது மட்டுமின்றி, மழை நீரை வெளியேற்ற 900 மோட்டார் பம்புகள், 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள், சுமார் 1,500 பேருக்கு உணவு பொட்டலங்கள் தயாரிக்க சமையற்கூடங்கள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!