ஸ்டீல் விலையேற்றம் குறித்து சிபிஐ விசாரணை..! இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

Author: Sekar
26 March 2021, 2:52 pm
Steel_Industry_UpdateNews360
Quick Share

ஸ்டீல் விலை உயர்வு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர்.உதயகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஸ்டீல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஒரு டன் ரூ 42,000 ஆக இருந்த ஸ்டீல் விலை தற்போது 72,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 55% அளவிற்கு ஸ்டீல் விலை அதிகரித்துள்ளது. 

மூலப்பொருட்களின் விலை எதுவும் உயராத நிலையில், சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஸ்டீல் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து, ஸ்டீல் விலையை உயர்த்தி வருகின்றனர். தங்களின் அபரிமிதமான லாபத்திற்காக மக்களின் பணத்தை சுரண்டுவதாக இந்த நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூட சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். 

சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயற்கையாக விலையேற்றம் செய்து வருவதாக கூறியிருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையே, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம், கோயம்புத்தூர் பில்டர்ஸ் மற்றும் காண் டாக்டர்கள் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரியில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பிரதமர் அலுவலகம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புகார் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், தற்போது வரை இதில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மேலும் தமிழத்தில் ஸ்டீல் விலையில் தற்போது வரை எந்த வித குறைப்பும் இல்லை. 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்து வருகின்றனர். மேலும் தனியார் துறையிலும் பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் ஸ்டீல் விலை உயர்வு காரணமாக, தனியார் துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசு துறை பணிகளும் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளன. ஸ்டீல் விலை உயர்வால் திட்டப்பணிகளின் செலவு சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சிலர் விலை உயர்வால் பணிகளை புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரர் நல சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தது. 

டாடா ஸ்டீல் லிமிடெட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், செயில் ஸ்டீல், விசாக் ஸ்டீல், திருமலை டி.எம்.டி, காமாட்சி டி.எம்.டி, அக்னி டி.எம்.டி , இந்திரோலா ஸ்டீல் மற்றும் கிஸ்கோ டிஎம்டி நிறுவனங்கள் தவறான லாபத்திற்காக ஸ்டீல் விலையை அதிகரிப்பதற்காக, ஸ்டீல்களின் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி வருவதால், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சிபிஐ இது குறித்து விசாரணை செய்து, விசாரணை அறிக்கைகளை இரன்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Views: - 70

0

0