பள்ளி மாணவியிடம் சில்மிஷம்… ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்த சம்பவம்… கானா பாடகர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது..!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 11:26 am
Quick Share

சென்னை அருகே ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கானா பாடகர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி, கடந்த 8ம் தேதி வழக்கம்போல தண்டையார்பேட்டையில் உள்ள தான் பயின்று வரும் தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார். இதற்காக, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே இரண்டு நபர்கள் பயணித்து வந்தனர்.

அப்போது, புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியிடம் அந்த நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். கானா பாடகர்கள் என்பதால் பாட்டு பாடியவாரே செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு ஆட்டோவில் வந்துள்ளனர்.

அப்போது, மாணவியின் மீது கைபட்டதால், அவர்கள் மீது அச்சமடைந்த மாணவி தன்னை கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் மாணவியின் மூக்கு, தாடை உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

பின்னர், மாணவியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர், அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

அதில், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனடிப்படையில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கானா பாடகரான டோலக் ஜெகன் என்ற ஜெகதீஸ்வரனையும், கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி, ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 225

0

0