சென்னை – இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் : விமானத்தில் இருந்த பயணி உட்பட 2 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 9:21 pm
Drugs Caught - Updatenews360
Quick Share

சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்தமுயன்ற சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புடைய 184 கிராம் போதைப்பொருளை கடத்தமுயன்றவரை சென்னை விமானநிலையத்தில் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா் கைது செய்து, போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவுவான நாா்கோடிக் கண்ட்ரோல் பீரோ எனப்படும் என்சிபிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய போதை கடத்தல் பிரிவு போலீசார் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்து அங்கிருந்து கொழும்புக்கு புறப்பட இருந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை சோதனையிட்டனர்.

அப்போது இலங்கை செல்லவிருந்த ஒரு பயணியை சந்தேகத்தில் சோதித்தனா். அவர் வைத்திருந்த பைல்களில் ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரில் 184 ஆம்பெடமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பயணியின் இலங்கை பயணத்தை ரத்து செய்து, சென்னையில் உள்ள என்சிபி அலுவகத்திற்கு கொண்டு சென்றனா்.

அங்கு பயணியிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்த போதைப்பொருள் சென்னையிலிருந்து கடத்தப்பட்டு இலங்கையில் கொழும்பு உட்பட பல்வேறு நகரில் உள்ள இளைஞர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்படுவதாக தெரியவந்தது.

மேலும் இந்த போதைப் பொருளை இவரிடம் கொடுத்தனுப்பிய ஒருவர் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய போதை தடுப்புப் பிரிவு போலீஸ் தனிப்படையினர் திருவல்லிக்கேணி தங்கும் விடுதிக்கு சென்று அங்கு தங்கியிருந்த மதுரையை சோ்ந்த 57 வயது ஆண் ஒருவரை கைது செய்தனா்.

இதையடுத்து இருவரையும் தீவிர விசாரணை நடத்தினா்.அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப்பொருளை மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தது, இது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 512

0

0