திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி : வரவேற்ற ஆட்சியர்… இன்று மாலை சென்னை செல்கிறது ஜோதி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 11:47 am
Chess Torch - Updatenews360
Quick Share

மதுரையில் இருந்து திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் – இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் பெற்றுக்கொண்டார்.

அதனை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக் குழுவினரிடம் வழங்கி 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு ஜோதி ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, அன்பு,சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், விளையாட்டுத்துறை முதுநிலை மண்டல மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மண்டலக் குழுத் தலைவர் ஜெயநிர்மலா மற்றும், அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஸ்ரீரங்கம் சென்றடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, விளையாட்டு வீரர்கள் தன்னார்வலர்கள் வரவேற்றனர்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகம் வழியாக மன்னார்புரம், ரயில்வே ஜங்சன் மேம்பாலம், ரயில்வே ஜங்சன், தலைமை அஞ்சல் நிலையம் மகாத்மா காந்தி சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட்ரோடு, சாலைரோடு, காவிரிப் பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் முக்கொம்பு வரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைகிறது.

தொடர்ந்து இன்று மாலை சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

Views: - 529

0

0