5 நாள்.. 3 காரணங்கள்…! பிரதமர் மோடியை ஏன் சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..? ஒரு ‘பரபர பாலிடிக்ஸ்’

15 December 2019, 6:54 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை பெறவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 18ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் அவர் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை அடுத்த நாளான 19ம் தேதி சந்தித்து பேச உள்ளார்.

இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. சந்திப்பின் போது வீரப்பன்  வேட்டை புகழ் விஜயகுமாரும் இருப்பார் என்று தெரிகிறது.

சந்திப்பின் முக்கிய நோக்கமே, தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி விவாதிக்கத்தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஏற்கனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு அதிமுக ஆதரவு அளித்திருக்கிறது.

மாநில அளவில் இது அக்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி இருந்தாலும் மரபணு மாற்றப்பட்ட பாஜக என்ற பெயருடன் இதுவும் இருந்துவிட்டு போகட்டும் என்று பேச்சுகள் ஏற்கனவே எழுந்துவிட்டன.

அதை தொடர்ந்து தேசிய குடியுரிமை பற்றியும் விவாதிக்க இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அடுத்து உள்ளாட்சித் தேர்தல் விவகாரம். மேயர் பதவியை பாஜகவுக்கு தரவே கூடாது என்ற முடிவுடன் தான் மறைமுக தேர்தல் என்ற அஸ்திரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்தார் என்று ஏற்கனவே ஒரு பேச்சு உண்டு.

எனவே, அதை பற்றியும் ஆலோசனைகள் நிகழும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதை எல்லாம் பற்றியும் எந்த விவரமும் லீக் ஆகி விடக்கூடாது என்பதற்காக தான் நிதி ஒதுக்கீடு தொடர்பான சந்திப்பு என்று பூசி மெழுகும் காரணமும் தமிழக அரசியலில் உலா வந்து கொண்டிக்கிறது.

தமிழகத்தில் எந்த ரூபத்திலாவது நுழைந்துவிட வேண்டும் பகீரத பிரயத்தனம் செய்யும் பாஜகவின் குறிக்கோளுக்கு ஜெயம் கிடைத்துவிடக் கூடாது என்பது தான் நடுநிலையாளர்களின் ஆணித்தரமான கருத்து.