நெருங்கும் சட்டசபை தேர்தல்: நெல்லை, தென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம்..!!

18 February 2021, 9:07 am
cm campaign - updatenews360
Quick Share

நெல்லை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக தூத்துக்குடியில் இருந்து காரில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வள்ளியூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காலை 10 மணிக்கு பேசுகிறார். காலை 11.40 மணிக்கு களக்காடு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் மகளிர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் சேரன்மாதேவி ஸ்காட் கல்லூரியில் மதியம் 1 மணிக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் நடக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து நெல்லை வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நெல்லையில் இருந்து கார் மூலம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் செல்கிறார். ஆலங்குளத்தில் மாலை 4 மணிக்கு ஏ.ஜே. மகாலில் நடக்கும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஐ.டி.பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் பாவூர்சத்திரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து தென்காசியில் இசக்கி மஹாலில் நடக்கும் மகளிர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சருக்கு நெல்லை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., குட்டியப்பா என்ற கிருஷ்முரளி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. நாளை குற்றாலத்தில் இருந்து கடையநல்லூர் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பள்ளிவாசல் முன்பு காலை 10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

11.30 மணிக்கு புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் மகளிருடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து 12.15 மணிக்கு சங்கரன்கோவில் வைஷ்ணவி மகாலில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஐ.டி பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்சியினர் வரவேற்பு பதாகைகளையும், கட்சி கொடிகளையும் கட்டியுள்ளனர்.

Views: - 1