முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்: கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்..!!

6 July 2021, 9:00 am
Quick Share

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று திருவாரூர் வருகிறார். சென்னையில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் புறப்படும் அவர் திருச்சிக்கு வருகிறார்.

திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் வருகிறார். இரவு காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

CM Stalin - Updatenews360

நாளை காலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10½ கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து திருக்குவளைக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார். அங்கு தனது தந்தை இல்லமான முத்துவேலர் நூலகம், அஞ்சுகத்தம்மாள் படிப்பகத்துக்கு சென்று கருணாநிதி படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவெண்காடு செல்கிறார். இதைத்தொடர்ந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் டிரோன் கேமரா இன்று மற்றும் நாளை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விதிகளை மீறி டிரோன் கேமரா பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக திருவாரூர் வருவதால் கட்சியினர், பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Views: - 139

0

0