முகக்கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..!!

29 November 2020, 8:34 am
k shanmugam - updatenews360
Quick Share

சென்னை: பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்து முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை செய்யும் அளவு ஒருபோதும் குறையக்கூடாது.

100 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற பாசிடிவிட்டி ரேட் 2 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டு வர செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும்.

சிறப்பு சிகிச்சை விதிமுறைகளை பின்பற்றி இறப்பு இல்லாத நிலையை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். தொற்றில் இருந்து மீண்ட பிறகு ஏற்படும் சுகாதார சிக்கல்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்.

தேவைப்பட்டால் துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். நமது மாநிலத்தில் 30 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே முக கவசம் அணிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்க்கெட், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சமூக மற்றும் மதம் சார்ந்த ஒன்று கூடல்கள் உள்பட பல்வேறு பொது இடங்களில் கொரோனா ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவது இல்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0