வலியால் துடித்த கர்ப்பிணி… ஆட்டோவில் பிரசவம் பார்த்த காவலர்.. ஆச்சரியத்தில் உறைந்த மருத்துவர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2025, 2:34 pm
சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி. பள்ளி அருகே நேற்றிரவு (ஆகஸ்ட் 14, 2025) காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஒரு பெண் கதறி அழும் சத்தம் கேட்டு, பெண் காவலர் கோகிலா உட்பட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒடிசாவைச் சேர்ந்த பாரதி என்பவரை அவரது கணவர் பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தெரியவந்தது.
பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில், அவர் வலியால் துடித்தார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் குழந்தை பிறந்துவிடும் அபாயம் மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கோகிலா, தனது நர்சிங் பயிற்சியைப் பயன்படுத்தி, ஆட்டோவிலேயே தைரியமாக பிரசவம் பார்த்தார்.

இதன் விளைவாக, அழகான பெண் குழந்தை பிறந்தது.பிரசவத்திற்குப் பின், தாய் பாரதியும் குழந்தையும் உடனடியாக திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததையடுத்து, தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
பாராட்டு மழையில் கோகிலா
பாரதியின் உயிரைக் காப்பாற்றி, துணிச்சலுடன் பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து கோகிலா கூறுகையில், “நான் நர்சிங் பயின்றவள். மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவமும், பிரசவங்கள் பார்த்த அனுபவமும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு தமிழக காவல்துறையில் சேர்ந்தேன். எனது அனுபவத்தை வைத்து, எந்த பதற்றமும் இன்றி பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும் குழந்தையும் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
