வேறு ஒருவருக்கு மனைவியான Childhood தோழி.. ஒருதலைக் காதலால் நண்பன் செய்த வெறிச்செயல் : அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2021, 6:14 pm
Murder Attempt -Updatenews360
Quick Share

திருவாரூர் : முத்துப்பேட்டை அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 34). இருவருக்கும் பத்து வயதில் ஹரீஸ் என்ற மகன் உள்ளார். கண்ணன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் புவனேஸ்வரி கரியாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பள்ளி அலுவல் வேலை காரணமாக புவனேஸ்வரி முத்துப்பேட்டை சென்றுவிட்டு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது புவனேஸ்வரியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (வயது 36) என்பவர் கோபாலசமுத்திரம் விநாயகர் கோயில் அருகே புவனேஸ்வரியின் இரு சக்கர வாகனத்தின் மீது தனது வாகனத்தை மோதி உள்ளார்.

இதில் நிலை தடுமாறி புவனேஸ்வரி கீழே விழுந்துள்ளார். அப்போது மதிவாணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் உடலில் மூன்று முறை குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட முயன்றுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து மதிவாணனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல 108 ஆம்புலன்ஸ் மூலமாக புவனேஸ்வரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் புவனேஸ்வரி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மதிவாணன் போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிவாணன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர். அதன் பின்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படித்து உள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் கல்லூரி படிப்பை முடித்து மதிவாணன் சொந்த ஊரான முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை  மேலக்காடு பகுதிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அதே முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணனுக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தலை காதல் விவகாரத்தால் இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் இருவரும் சிகிச்சையில் இருப்பதாலும், தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடத்தில் பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 386

0

0