மூன்று ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் மதகுகள் அடைப்பு: தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

Author: Udhayakumar Raman
27 October 2021, 9:52 pm
Quick Share

தேனி: இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவிலான கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர்வரத்துகுறைந்தால் மூன்று ஷட்டர்களும் மூடப்பட்டு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இடுக்கி தாலுகாவிற்கு உட்பட்ட செறுதோணி அருகே பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவ இடுக்கி அணை. 1969ம் ஆண்டு அணை கட்டும் மணி துவங்கப்பட்டு 1973ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.75 டி.எம்.சி., நீர் கொள்ளவு கொண்ட இடுக்கி அணை கேரள மின்சார வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. அணை மொத்த நீர்மட்டம் 2,403 அடி என கடல் மட்டத்திலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது. அணை நீர் மூலம் தினசரி 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மூலமற்றம், செறுதோணி, குளமாவு மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வந்தது. கடந்த 19ம் தேதி அணையின் நீர்மட்டம் 2,398 அடியாக உயர்ந்ததால் அணைக்கு மூன்றாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஅணை 3 ஷட்டர்கள் தலா 35 செமீ உயர்த்தப்பட்டு நீர் திறக்கப்பட்டது. இடுக்கி அணை நீர் சென்றடையும் செறுதோணி, வாழைத்தோப்பு எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரையிலான நீரோட்ட பாதைகளில் பொதுமக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். அணையின் நீரோட்ட பாதைகளில் மீன் பிடித்தல், குளித்தல், ஆற்றைக் கடத்தல், ஆற்றில் துவைத்தலுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இடுக்கி அணைப்பகுதியில் மழை குறைந்ததால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து கடந்த 22ம் தேதி காலை நிலவரப்படி விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியில் இருந்து 5,510 கன அடியாக குறைந்தது. இதையடுத்து அணையின் இரண்டு மற்றும் நான்காம் மதகுகள் அடைக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது.
அணையில் இருந்து விநாடிக்கு 1,490 கன அடி தண்ணீர், செறுதோணி அணையின் மூன்றாம் மதகான ஒரு மதகில் இருந்து மட்டும் வெளியேற்றப்பட்டு வந்தது.தற்போது அணையின் நீர்மட்டம் 2,397.90 அடியாகக் குறைந்ததையடுத்து அடக்கப்பட்டிருந்த மூன்றாம் மதகும் மூடப்பட்டு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.இடுக்கி அணை வரலாற்றிலேயே இதுவரையிலும் 1981, 1992, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் 4 முறை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 113

0

0