மேகதாது அணை விவகாரம்: பிரதமரை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

18 July 2021, 9:44 am
Stalin - Updatenews360
Quick Share

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வரும்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

கர்நாடக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன. இந்த சூழலில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது.

அவர்களைத்தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லி செல்கிறார். அவர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசுவதற்காக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 149

0

0