அறிவுரை கூறிய அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 1:17 pm

கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அதிமுக பிரமுகரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சியின் 92 – வது வார்டு அ.தி.மு.க செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜா என்கிற ஜூனியர் ராஜா.

குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அப்போது அ.தி.மு.க பிரமுகர் ராஜா அவர்களை திட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவரான கோபிநாத் தனது நண்பர்களுடன் வந்து ராஜாவை மிரட்டி உள்ளார். இதை தொடர்ந்து மற்றொரு கொலை முயற்சி வழக்கில் கோபிநாத் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை ராஜா குனியமுத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் தனது நண்பரான பூமிநாதன் என்பவருடன் ராஜாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ராஜாவை வெட்டி உள்ளார்.

அப்போது அதனை தடுக்க முற்பட்ட ராஜாவின் இரு கைகளிலும் சரமாரியாக வெட்டு விழவே உடனடியாக இருவரும் அங்கு இருந்து தப்பியோடி உள்ளனர்.

பின்னர் ரத்த காயங்களுடன் கிடந்த ராஜாவை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்க: பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு… ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து ; கோவையில் பகீர்!

மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து அதனடிப்படையில் தலைமறைவாக இருந்த இருவரையும் பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?