கோவையில் மேலும் ஒரு யானைக்கு உடல்நலக்குறைவு : உயிரை காக்க போராடும் மருத்துவர்கள்!!

9 September 2020, 6:11 pm
Mtp Elephant - updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசித்துவரும் கூடிய சூழலில் ஒரு ஆண் காட்டு யானைக்கு காலில் காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து அந்த யானையை கண்காணித்து ஆய்வுசெய்த வனத்துறையினர் யானையின் இடது முன்னங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு நடக்கமுடியாமல் மிகவும் சிரமப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் குன்னூர் ஆற்றுப்பகுதியில் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அந்த ஆண் காட்டு யானை குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர்.

வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யானைக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதல் கட்டமாக அதன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரைகள் பொடியாக்கப்பட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்த பலாப்பழம், வாழைபழங்களில் வைத்து யானைக்கு தூரத்திலிருந்து வழங்கப்பட்டது.

யானை வனத்துறையிடம் எவ்வித ஆக்ரோஷமும் காட்டாமல் வனத்துறையினர் வழங்கிய பழங்களை எடுத்து உட்கொண்டது, மேலும் யானையின் உடல்நிலையை கண்காணிக்கும் வகையில் யானை எந்த பகுதியில் மீண்டும் செல்கிறது என்பது குறித்து டிராப் கேமராக்கள் வைத்து கண்காணித்து வரும் வனத்துறையினர் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் வகையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மூலமும் யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்

தற்போது வரை யானை ஆரோக்கியத்துடன் நடமாடுவதாக கூறியுள்ள வனத்துறையினர் மேற்கொண்டு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Views: - 8

0

0