‘எங்கள ஆட்டோ ஓட்ட விட மாட்றாங்க’… பெண் உள்பட 3 ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 1:45 pm

கோவை : கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த 3 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பெண் உட்பட 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார், ரகு, மற்றும் அகமது இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக துடியலூர் பகுதியில் உள்ள பாஜக ஆட்டோ ஸ்டேன்டில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ஆனந்தகுமார் திமுக ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக ஆனந்தகுமார் உட்பட மூவரையும், அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டவிடாமல், ரகளை செய்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மனு அளித்துள்ளனர்.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால், மீண்டும் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்ட விடாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மீண்டும், ஆனந்தகுமார், ரகு, அகமது ஆகியோர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது திடீரென ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை எடுத்து ஆனந்தகுமார், ரகு, அகமது மற்றும் ஆனந்தகுமாரின் தாய் லட்சுமி ஆகியோர் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 4 பேர் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை பத்திரமாக மீட்டு பிறகு கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்களின் உறவினர்கள் கூறும் போது : துடியலூர் பாஜக ஆட்டோ ஸ்டேன்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், ஆனந்தகுமார் உள்ளிட்டோரை பாஜகவில் சேர சொல்லி நிர்பந்தம் செய்வதாகவும், மதம் மற்றும் வகுப்பு பாகுபாடு பார்த்து ஆட்டோ ஓட்ட விடாமல் மிரட்டல் விடுவதாக தெரிவித்தனர். மேலும், கடந்த சில மாதங்களாக சரியாக ஆட்டோ ஓட்ட முடியாததால் வாடகை, குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியாதல் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக, தெரிவிக்கின்றனர்.

போலீசா் பாதுகாப்பு கடுமையாக இருந்த போதும் திடீரென 3 ஆட்டோ ஒட்டுநர்கள் உட்பட 4 பேர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!