மீண்டும் மீண்டுமா..? வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சிமெண்ட் சாலை ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 8:31 pm

சூலூர் அருகே வீதிக்கு நடுவே இருந்த மின்கம்பத்தை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான் பேட்டை அருகே உள்ளது செஞ்சேரி கிராமம். குமாரபாளையம் ஊராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தின் வீதி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வீதியின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மின்சார வாரியம் மூலம் இடம் மாற்றிவிட்டு சாலை அமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கம்பத்தை சுற்றிலும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்தும், மின்சார வாரியம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் மின் கம்பத்தை அகற்றாமல், அதனை சுற்றிலும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் இவ்வீதியில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சினிமாவை மிஞ்சிய சம்பவம்… போலி நகைகளை கொடுத்து பணம் பறிக்க முயற்சி ; ஆட்டோவை சேஸ் செய்து கும்பலை மடக்கி பிடித்த இளைஞர்கள்!!

வீதியின் நடுவே உள்ள மின்கம்பத்தை சுற்றிலும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள வீடியோ பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!