‘தரமில்லை எனில் பில் கிடைக்காது’… ஒப்பந்ததாரர்களுக்கு கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
20 October 2023, 7:11 pm
Quick Share

கோவை மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையர் சிவகுரு பிரபாகரன், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி, கோவை மாவட்டத்தின் மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், திட்ட இயக்குனராகவும் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக கோவை மாவட்டத்தின் புதிய மாநகராட்சி ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்பாக சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரை சந்திக்க வந்த ஒப்பந்ததாரர்களுக்கு, அரசு ஒப்பந்தப் பணிகளை தரமில்லாமல் மேற்கொண்டால், அதற்கான பில் தொகையை விடுவிக்கப்படாது என்று கூறியுள்ளார். எனவே, பணிகளை தரத்துடனும், உரிய கால அளவிலும் முடித்து கொடுப்பதுடன், மாநகராட்சிடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.

Views: - 149

0

0