முன்வைப்பு தொகையை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக வழங்க வேண்டும் ; மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

Author: Babu Lakshmanan
29 December 2023, 6:48 pm
Quick Share

ஒப்பந்ததாரர்களின் முன்வைப்பு தொகையை ஒப்புதல் முடிந்ததும், திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்களின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அவிநாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு ஆனந்தாஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணைச் செயலாளர் மைக்கேல், கொசினா செயலாளர் சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் சங்க உறுப்பினர்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து ஒப்பந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், பில் தொகை வழங்காமல் நிலுவை அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் 5 சதவீதம் பிடித்தம் செய்த தொகையை பல ஆண்டுகள் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

இதை விரைவாக வழங்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பில் தொகை நிலுவை மற்றும் 5 சதவீத பிடித்தம் செய்த தொகை விரைவாக வழங்க மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படும்.
மாநகராட்சியில் பிடித்தம் செய்த 2 சதவீத ஜிஎஸ்டி தொகையை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் ஜிஎஸ்டி அக்கவுண்டில் கட்ட வழிவகை செய்ய வேண்டும்.

டெண்டர்களில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களின் எல் 2 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் 1 சதவீத முன்வைப்பு தொகையை (இஎம்டி) சி பிரிவு ஒப்புதல் முடிந்ததும், திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் சங்க உறுப்பினர்கள் சின்னப்பன், பால்ராஜ், கார்த்திகேயன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு2024ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரி வழங்கப்பட்டது. காவேரி பைப்ஸ் நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மரக்கன்றுகள் வழங்கினார்.

வரும் ஜனவரி 7ம் தேதி சங்கத்தின் 28 ஆம் ஆண்டு விழா பீளமேடு கொடிசியா அரங்கத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

Views: - 277

0

0