கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக ஆய்வு..!

6 September 2020, 12:08 pm
Cbe Collector Request - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணியில் 1800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் 400, 500 என்று அதிகரித்து தற்போது 600 பேர் வரை நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது.

குறிப்பாக ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் மாநகரில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாகவுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதிகளை சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து மாநகரில் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று நோய்த் தொற்று கண்டறியும் பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரபடுத்தியுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளில் 1,800 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1,500 பேர் தடுப்பு பணிக்கு ஈடுபடுத்த உள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. தினமும் 600 பேர் வரையில் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படும் நிலையில் இவர்களில் 85 சதவீதம் பேர் மாநகராட்சியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் மாநகராட்சியில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறித்து வீதி, வார்டு, மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய ஆகிய மூன்று மண்டலங்களில் பாதிப்பு அதிகமாகவுள்ளது தெரியவந்துள்ளது.

தவிர மாநகராட்சியில் உள்ள 5731 வீதிகளில் 1136 வீதிகளில் மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 93 வீதிகளில் 3க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறியும் வகையில் 60 குழு அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளைகளில் தினமும் 120 மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

இதிலும் விடுபடுபவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வீடு, வீடாக ஆய்வும் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 1,800 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்கு 50 வீடுகளில் ஆய்வு செய்வர். இதுபோல வாரத்தில் 6 நாள்களுக்கு 300 வீடுகளில் ஆய்வு செய்வர்.

திரும்ப அடுத்த வாரத்தில் முதல் வீட்டில் இருந்து மீண்டும் ஆய்வினை தொடங்குவர். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றினை எளிதில் கண்டறிய முடியும்.

வீடு, வீடாக ஆய்வின் போது அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அருகில் நடைபெறும் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பிவைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் அல்லது அவர்களில் கோரிக்கைப் பொறுத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தவிர அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளவர்களுக்கு வீடுகளில் தனிமப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அவர்களுக்குத் 14 நாள்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. அதேபோல் தனியார் தொழிற்சாலைகளில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தாலுகா வாரியாக தொழிற்சாலைகளை கண்காணிக்க வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பபு கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அலட்சியப்படுத்தாமல் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Views: - 0

0

0