கோவை – மதுரை சென்ற ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து : பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 5:55 pm
Tirupur Omni Bus Fire 1- Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே இன்று காலை கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணியர் யாரும் இல்லாததால் பெரும உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து கூறப்படுவதாவது, மதுரை மேலூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் நேற்று இரவு அங்கிருந்த தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்டுள்ளார்.

பின்னர் காலியான பேருந்தை தொடர்ந்து மீண்டும் மதுரை நோக்கி பல்லடம் வழியே சென்றுள்ளார். ஆம்னி பேருந்து பல்லடம் அருகே காரணம்பேட்டையை கடந்த போது ஆறாக்குளம் பிரிவில் பேருந்தின் முன் பகுதியிலிருந்து திடீரென கரும்புகை வந்ததால் உடனடியாக அந்தப் பேருந்தை ஓட்டுநர் தெய்வேந்திரன் ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்பு துறையினரின் அவசர உதவி எண்ணுக்கு தனது செல்போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பல்லடம் மற்றும் சூலூர் தீயணைப்புத்துறை வாகனங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய தீயை தண்ணீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.இதுகுறித்து போலீசார் கூறுகையில் பேருந்தில் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பேருந்தில் பயணிகள் தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Views: - 410

0

0