மரங்கள், பூங்காக்களை அழித்து தண்ணீர் தொட்டி கட்டுவதா..? சூயஸ் திட்டப்பணிகளுக்கு கோவை மக்கள் எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 11:32 am
Quick Share

கோவை : சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக மரங்கள் மற்றும் பூங்காக்களை அழித்து தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவையில் சூயஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மரங்களையும் வெட்டியும், பூங்காக்களை சுருக்கியும் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு சிவராம் நகர் குடியிருப்பு சங்கத்தினர் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- இந்த பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பல குடும்பங்கள் இணைந்து ஒரு குடியிருப்பு நல சங்கமாக செயல்பட்டு வருகிறோம். இப்பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் குழந்தைகள் பொழுதுபோக்கு, முதியோர்கள் நடபயணம் என இக்குடியிருப்பு பகுதியினருக்கு பெரும் பயனாக இருக்கிறது.

மேலும் மரங்களை நட்டு பராமரித்துக் கொண்டு வருகிறோம். தற்போது, இப்பூங்காவை அகற்றியும், மரங்களை அழித்தும், தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

தற்போது ஆட்சி மாற்றத்தால் மீண்டும் இத்தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி தண்ணீர் தொட்டி கட்டும் பணியை கைவிடவும், மீண்டும் அந்த இடத்தில் பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும், எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

Views: - 548

0

0