உயிர் தியாகம் செய்ய தயார்.! போரில் கலந்து கொள்ள அனுமதி கோரி அரசு பள்ளி ஆசிரியர் ஆட்சியரிடம் மனு.!

10 August 2020, 1:57 pm
Govt Teacher - Updatenews360
Quick Share

கோவை: இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தான் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க கோரியும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அரசு. இவர் கோவை காளம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தியா சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து முதல் ஆளாக லடாக் பகுதிக்கு சென்று நமது இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து போர் புரிய விரும்புவதாக கூறினார்.

மேலும், தான் பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.