கோவையில் கொள்ளை சம்பவங்கள் நடக்கும் முக்கிய பகுதிகளை கண்காணிக்கும் போலீசார் : குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2021, 2:38 pm
கோவை : கோவை மாநகரில் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் 50 பகுதிகளை மையப்படுத்தி, போலீசார் சிறப்புத் தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடித்து கைது செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையே, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை மையப்படுத்தி, அங்கு சிறப்பு வாகனத் தணிக்கை செய்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸ் உயரதிகாரிகள் மாநகர போலீஸ்துறை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினர்.
அதனடிப்படையில், கோவை மாநகரில், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமாரின் உத்தரவின் பேரில், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்புத் தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போலீசார் கொள்ளை அதிகம் நடக்கும் இடங்களை மையமாக வைத்து இரவு நேரங்களில் வாகனத் தனிக்கை செய்வார்கள், மேலும், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் வந்தால் அவர்களை புகைப்படம் எடுத்து பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
0
0