தென் திருப்பதியில் பிரம்மோற்சவ திருவிழா : கோவிந்தா கோஷம் முழுங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!!

26 September 2020, 3:49 pm
Then Tirupati - updatenews360
Quick Share

கோவை : தென் திருமலை வெங்கடேஸ்வரா ஸ்ரீவாரி ஆலயத்தில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையம் தென்திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடேஸ்வரா ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர புரட்டாசி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையடுத்து பிரம்மோற்சவத்தில் தினந்தோறும் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மலையப்பசாமி அன்னபட்சி வாகனம், பெரியசேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், முத்து பந்தல் வாகனம், சிம்மவாகனம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து மலையப்ப சுவாமி திருவீதி உலா வரும் திருத்தேரோட்டம் நடைபெற்றது, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கபட்ட தேரில் மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்களின் ‘கோவிந்தா கோவிந்தா‘ கோஷங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி வந்து மீண்டும் கோவிலை அடைந்தது விழாவில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓகே சின்னராஜ் முன்னாள் எம்பியும் கழக அமைப்புச் செயலாளருமான ஏ கே செல்வராஜ் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர்கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வந்து பங்கேற்று மலையப்ப சுவாமியை வழிபட்டனர்

Views: - 9

0

0