சதுரங்க வேட்டையாக மாறிய காதல் கோட்டை.!!
5 September 2020, 3:30 pmசெங்கல்பட்டு : ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே சமூக வலைத்தளத்தின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவரின் மகள் பாரதி (வயது20). இவர் அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த நந்தகோபால் (வயது 30) என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவி பாரதியிடம் காதலிப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி நேரில் சந்திக்காமல் சமூக வலை மூலமாகவே பழகி வந்து உள்ளார் .
பாரதியும் இதனை நம்பி சிறுக சிறுக சுமார் இரண்டு லட்ச ரூபாய் வரை கூகுள் பே மூலமாகவும் வங்கி மூலமாகவும் வீட்டிற்கு தெரியாமல் நந்தகோபாலுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பாரதியிடம் 20,000 ரூபாய் அவசரமாக தேவை என கேட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் தயங்கிய பாரதியிடம் பணம் கொடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொண்டு செத்து விடுவேன் என பயமுறுத்தி உள்ளார். பயந்து போன பாரதி தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது தந்தை அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேற்று செஞ்சி பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்பவரை அணைக்கட்டு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நந்தகோபால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் இவருக்கு 7 வயதில் மகன் உள்ளார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து நந்தகோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒர உதாரணம். மனதால் காதல் கோட்டை கட்டிய கல்லூரி மாணவிக்கு இது சதுரங்கை வேட்டை என இப்போதுதான் உணர்ந்துள்ளார்.
0
0