காங்கேயத்தில் கார்பன் ஆலை பாதிப்பு விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு…போராட்டம் வாபஸ்..!!

3 November 2020, 11:57 am
kan taluk 3 -updatenews360
Quick Share

காங்கேயம் அருகே கார்பன் ஆலையால் ஏற்படும் மாசு விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதை அடுத்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பொத்திபாளையம் ஊராட்சியில் அவினாசிபாளையம் புதூரில் United corbon solution கார்பன் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையால், அவினாசிபாளையம் புதூர், ஜெ.ஜெ.நகர், பாப்பிரட்டி பாளையம், துண்டுக்காடு, சேடங்காளிபாளையம், ஆறுதொழுவு காளி பாளையம் மற்றும் வட்டமலை அணைக்கு செல்லும் ஓடைப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள், பொதுமக்கள் குடிநீர் கிணறுகள் என 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு முதல் திருப்பூர் மாசு கட்டுபாடு அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டும், இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால், விவசாய சங்கம் சார்பில் இன்று காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

இதையடுத்து இன்று காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கேயம் தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், காங்கேயம் டி.எஸ்.பி தனராசு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, ஆகியோர் முன்னிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, சங்க பிரதநிதிகள்,மற்றும் விவசாயிகள் 30 பேர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், சட்ட விதிமுறைகள் மீறி ஆலை செயல்படுகிறது, இதனால் ஆலையை மூட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அறிவித்திருந்த, முற்றுகை போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது. 20 நாட்களில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0