பொங்கல் அன்று ராகுல் காந்தியின் மெகா திட்டம்… I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் : காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நம்பிக்கை

Author: Babu Lakshmanan
8 January 2024, 9:42 pm

ராகுல் காந்தியின் 2ம் கட்ட நடைப்பயணம் I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான காமராஜர் அரங்கில் பொங்கல் விழா, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினர் ஆகிய ரெக்ஸ் தலைமையில்
நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட மாநகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய 2ம் கட்ட நடை பயணத்தை வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்க உள்ளார். அவரின் முதல் பயணம் இமாலய வெற்றி பெற்றது போல, இரண்டாவது பயணமும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். மேலும் I.N.D.I.A. கூட்டணிக்கு வலு சேர்க்கும், காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்தும். வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அந்த நடைபயணம் எளிதாக்கும். அந்த நடைபயணம் வெற்றி பெற தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 பேரை விடுதலை செய்து குஜராத் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தான். அவர்களின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விமான நிலைய திறப்பு விழா முழுமையாக அரசு விழாவாக நடைபெறவில்லை. அந்த விழாவில் அரசியல் கலப்பு இருந்தது. அதனால் தான் அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது, என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!