அதிமுக பிரமுகரை கொல்ல சதி? ரூ.5 லட்சம் பணம் கொள்ளை.. வாசலில் நின்ற கார் எரிப்பு : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2021, 11:22 am
Admk Car Fire - Updatenews360
Quick Share

சிவகங்கை : ஆவின் தலைவரும் அதிமுக பிரமுகருமான அசோகன் வீட்டில் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வாசலில் நின்ற இன்னோவா காரை எரித்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். அதிமுக பிரமுகரான இவர் தேவகோட்டையில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

ஆவின் சேர்மனாகவும் பதவி வகித்து வரும் அசோகனின் சொந்த கிராமமான கல்லுவயலில் உள்ள வீட்டில், நள்ளிரவு மர்ம நபர்கள் வாசல் கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

மேலும், வாசலில் நின்ற இன்னோவா காருக்கும் தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இந்நிலையில், தீயில் எரிந்து கொண்டிருந்த காரின் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது,கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தும் முடியாமல், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அமராவதி புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவம் இடம் வந்த காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்டும், காரை எரித்தும் தப்பிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 581

0

0