மதுரையில் பட்டாசு வெடிப்பதில் தகராறு : பயங்கர ஆயுதங்களுடன் மோதிய இளைஞர்கள்!!

17 November 2020, 1:39 pm
Youth Clash - Updatenews360
Quick Share

மதுரை : அண்ணா நகர் பகுதியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பு இளைஞர்கள் ஆயுதங்களுடன் ஓடஓட வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணாநகர் கோல்சா காம்ப்ளக்ஸ் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து இருதரப்பினரும் வாக்குவாதம் செய்த நிலையில், பின்னர் கைகலப்பாக மாறியது. இதற்கிடையே சண்டையின்போது, ஆத்திரமடைந்த ஒரு தரப்பு இளைஞர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துவந்து நடு ரோட்டில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி ஆயுதங்களால் வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றனர்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் இளைஞர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.அந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையில் பரபரப்பாக உள்ள சாலையில் தலையை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைஞர்கள் கையில் ஆயுதங்களோடு மோதிய சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.