கொரோனாவுக்கு ஊழியர் பலி : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் முன்பு உறவினர்கள் போராட்டம்..!!

15 May 2021, 7:20 pm
karur - updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே கொரோனா பாதித்தவர் உயிரிழந்த நிலையில், அவர் பணிபுரிந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் முன்பு உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், விலாமரத்தூர் பகுதியினை சார்ந்தவர் சுப்பையா பிள்ளை. இவரது மகன் கே.எஸ்.பத்மலோச்சன குமார் (வயது 54). இவர், கரூர் அடுத்த புகளூர் வட்டம், காகிதபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையில் பணியாற்றி வந்த நிலையில், இவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, கரூர் அடுத்த தாந்தோன்றிமலை ஏபிஎஸ் என்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா கோர தாண்டவத்தில் உயிரிழந்த அவரது இறப்பிற்கு நிவாரண நிதி கேட்டும், அவர் பணியாற்றி வந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையில் அவரது குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு பணி வழங்கிட வேண்டுமென்று கூறி, கரூர் அடுத்த காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் முன்பு கேட் எண் 2 ல் கொரோனாவினால் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமில்லாது, அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீரென்று நடைபெற்ற போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையில் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆலை நிர்வாகம் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விடுமுறை அளிக்காமல் அப்படியே இயக்குவதாகவும், உடனே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 110

1

0