முன்னாள் மத்திய அமைச்சர் உட்பட கோவையில் 484 பேருக்கு கொரோனா..!
26 August 2020, 10:10 pmகோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர், அவரின் மகன் உள்பட மொத்தம் 484 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த வாரங்களில் தினமும் 390 முதல் 395 பேர் பாதிக்கப்பட்டு வந்நிலையில், தற்போது முதல் முறையாக ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1,203 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 484 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில், தி.மு.க முக்கிய பிரமுகர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரான கண்ணப்பன்(83) மற்றும் அவரின் மகன் மற்றும் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கண்ணப்பன் மற்றும் அவரின் மகன் மு.க முத்து கோவை தனியார் மருத்துவமனையிலும், தென்றல் செல்வராஜ் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இவர்கள், கட்சி பணியில் ஈடுபட்டு வந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, கோவை அரசு மருத்துவமனை புகைப்பட கலைஞர் ஒருவர், 37 வயது பெண் மருத்துவ ஊழியர், உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த இருவர், பொள்ளாச்சியை சேர்ந்த 15 பேர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 954-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 9,442 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3,250 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 51 வயது ஆண், 49 வயது ஆண், 74 வயது முதியவர், 69 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 70 வயது மூதாட்டி, 52 வயது ஆண், 58 வயது ஆண்,
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 78 வயது முதியவர், 62 வயது ஆண், 63 வயது ஆண் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 359 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.