அரசு கல்லூரி திறந்தாலும் கொரோனா சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் : அரசு மருத்துவமனை டீன்!!

4 July 2021, 10:19 am
Cbe Arts College- Updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என்றும் கல்லூரிகள் திறந்தாலும் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என்று டீன் நிர்மலா தகவல் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தது. தொற்று ஏற்பட்ட 70 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இதனால் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவியது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்டது.

இதனை, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் அளவு 88 முதல் 90 சதவிகிதம் இருக்கும் நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுழற்சி முறையில் டாக்டர்கள் நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பொழுது படிப்படியாக கொரோனா குறைந்து வருவதால் மூன்றாம் அலைக்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், அதற்கான ஆயத்த பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, ‘‘அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் இதனை மூட வாய்ப்பில்லை. கல்லூரிகள் திறந்தாலும் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை மையம் செயல்படும்.

அதற்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படும். சிகிச்சை மையத்தை உடனடியாக அங்கிருந்து மாற்றிய பின் மீண்டும் பரவல் அதிகரித்தால் திரும்பவும் சிகிச்சை மையத்தை ஏற்படுத்துவதற்கு காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மையம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.

Views: - 144

0

0