தப்பியது கிருஷ்ணகிரி : பச்சை மண்டலமாகவே நீடிக்கும் ஆச்சர்யம்!

30 April 2020, 3:47 pm
Krishnagiri-railway - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 11 பேருக்கு பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டதால், பச்சை மண்டலமாகவே கிருஷ்ணகிரி நீடித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் 2,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,210 பேர் குணமடைந்துள்ளனர். அதிக பாதிப்பு கொண்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்கள் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லாத பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. நேற்று முன்தினம் விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 9 பேர் உள்பட 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரியும் கொரோனா பதித்த பகுதியாக மாறும் சூழல் நிலவி வந்தது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 11 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நீடிக்கிறது. கிருஷ்ணகிரியை தொடர்ந்து பச்சை மண்டலமாகவே வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.