‘நம்ம வேறு வேறு சமூகம்.. இது சாத்தியமா’..! கோவிலில் இளம்காதல் ஜோடிகள் செய்த காரியம்..!

6 August 2020, 4:08 pm
temple suicide - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கல்லூரியில் படித்து வந்த இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் வனப் பகுதியில் உள்ள கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பாஸ்குமார் என்பவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி கவிதாவும், ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்காட்டாய் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.
கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பாஸ்குமார், இரவு வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இதேபோல், நேற்று மாலை முதல் வீட்டிலிருந்து வெளிய சென்ற கவிதாவும் வீடு திரும்பாததால், கவிதாவின் பெற்றோரும் மகளை தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரியூர் காட்டு கொட்டாய் வனப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள அருஞ்சோலை அம்மன் கோவிலில் ஒரு இளஞ்சோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக, அருகில் உள்ள விவசாயிகள் கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், இருவரின் விபரமும் தெரிய வந்தது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறையால், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நேரில் சந்தித்து கொள்ள முடியாத விரக்தியிலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்புகள் எழும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக, இருவரும் சைக்கிளில் கோவிலுக்கு சென்று தனிமையில் சந்தித்து பேசிய பின், கோவிலின் மேற்கூறையில் இருக்கும் இரும்பு கம்பியில் சாமி சிலைகளில் உள்ள வேட்டி மற்றும் புடவையை எடுத்து, சைக்கிளின் மீது ஏறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.