ஏ.டி.எம்.களில் பணம் திருடிய கொள்ளையனுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்

Author: Udhayakumar Raman
27 June 2021, 11:53 pm
Quick Share

சென்னை: சென்னை உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏ.டி.எம்.களில் பணம் திருடிய கொள்ளையன் வீரேந்தர் ராவத்தை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.இந்த கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையனான அமீர் (வயது 37) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டு, கோர்ட்டு காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான அமீரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ராயலா நகர் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்கள் அமீரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து அமீரிடம் 5 நாட்கள் போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்தநிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர் என்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் அரியானாவில் கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத் இன்று மாலை விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். இதையடுத்து ஹரியானாவில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் வீரேந்தர் ராவத் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 232

0

0