இன்னமும் ஒழியாத இன்னமும் இரட்டை குவளை முறை..? பட்டியலின பெண்களுக்கு தேங்காய் தொட்டியில் தேநீர் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 6:20 pm

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் இருந்து ஐந்து பட்டியலின வகுப்பைச் சார்ந்த பெண்கள், மாரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர்கள் தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்ததாகவும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்ட ஒரு நபர், காலம் எங்கோ சென்றிருக்கிறது, இன்னும் சாதிய வன்மமா..? அவர்களுக்கும் வேறு ஏதாவது டம்ளரில் கொடுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்து இருப்பது தவறு இது கண்டிக்கத்தக்கது என அந்த தோட்டத்தின் பெண் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

இந்த நிகழ்வால் அப்பகுதியில் ஒரு பேசும் பொருளாக உள்ள நிலையில் இது போன்ற செயல்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ந்து செய்து வருவதாகவும், அவர்களுக்கு சாதி பாகுபாடில்லாமல் அனைவரும் ஒற்றுமை என்ற நோக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?