விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்…இரு காவலர்கள் சஸ்பெண்ட்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு..!!

Author: Rajesh
14 May 2022, 4:31 pm
Quick Share

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் இரு காவலர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி கஞ்சா வழக்கில் கைதான விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காவலர்களை கைது செய்யுமாறு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் தமிழக காவல்துறை பரிந்துரைத்திருந்த நிலையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், காவல் நிலைய எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உதவி ஆணையர் சரவணன் டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தென் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி நடத்திய விசாரணையின் பரிந்துரையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.

Views: - 479

0

0