மணல் கொள்ளையை தடுத்த விவசாயிக்கு கொலை மிரட்டல்.. திருட்டில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசில் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 5:26 pm
Sand Theft - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : மணல் கொள்ளையை தடுத்த விவசாயிக்கு கொலை மிரட்டல் உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு தனது மகனுடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக ஆறு, ஏரி மற்றும் குளங்களில் மண் மற்றும் மணல் எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் மண் எடுப்பதற்கு தடைவிதித்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா IPS அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் மண் மற்றும் மணல் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் மீண்டும் தற்போது அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் மணல் கொள்ளை தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருநாத நாயக்கனூரில் வசிப்பவர் செல்வ முருகன்.

அதே பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது நிலத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு குளத்தில் சிலர் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர், டிப்பர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதை அருகே இருந்த விவசாயி ஒருவர் படமெடுத்து செல்வம் முருகனுக்கு அனுப்பி உள்ளார். செல்வமுருகன் உடனடியாக அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வட்டாட்சியர் காவல் துறையினர் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை அதற்கு மாறாக செல்வம் முருகனுக்கு கிராவல் மண்ணை திருடிய மணல் கொள்ளையர்கள் அவரைத் தேடியே வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் அவரது தொலைபேசிக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் மற்றும் எந்த அதிகாரிக்கு வேண்டுமானாலும், தொலைபேசியில் தகவல் சொல்லுங்கள் எங்களுக்கு பயம் இல்லை நாங்கள் தொடர்ந்து மண்ணள்ளி வருகிறோம் என்று தைரியமாக கூறுகிறார்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி நம்பர் வேண்டுமென்றாலும் நாங்கள் தருகிறோம் அவருக்கும் கூப்பிடுங்கள் என்று சுரேஷ்குமார் தொலைபேசியில் கூறுகிறார். மேலும் சுரேஷ்குமார் சகோதரர் ராஜ்குமார் மற்றும் சுரேஷ்குமாரின் மனைவி ஆனந்தி ஆகியோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விவசாயி செல்வமுருகனின் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மணல் கொள்ளையர்கள் சுரேஷ்குமார், ராஜ்குமார், சுரேஷ்குமாரின் மனைவி ஆனந்தி மீது உடனடி நடவடிக்கை வேண்டும் தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என புகார் மனு அளித்தார்

Views: - 269

0

0