மெரினா கடற்கரையை மக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து அடுத்த மாதம் முடிவு…!!

19 November 2020, 11:45 am
marina road - updatenews360-
Quick Share

மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் லூப் சாலையை புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

highcourt - updatenews360

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால், இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக வரும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘டிசம்பர் முதல் வாரத்துக்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும்’ என தெரிவித்துள்ளனர்.