பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா: சென்னை அழைத்து வர டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி..!!

16 June 2021, 6:50 pm
Quick Share

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. தான் ஒரு ஆன்மீகவாதி என்று வெளி உலகிற்கு காட்டி வந்தவர் சிவசங்கர் பாபா. இந்த ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அவரது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

இதனால் சிவசங்கர் பாபாவின் உண்மை முகம் வெளிவந்தது. மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட 8பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா தலைமறைவானார். இந்நிலையில் சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

தேடப்பட்டு வந்த நிலையில், சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது தரப்பினர் தெரிவித்திருந்தனர். இதனால் சிபிசிஐடி குழு டேராடூன் விரைந்தது. இதற்கிடையில் சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் டேராடூனில் இருந்து சிவசங்கர் பாபா தப்பித்துசென்றார்.

தீவிர தேடுதலை அடுத்து டெல்லி காசியாபாத்தில் பதுங்கியிருந்த அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தமிழக சிபிசிஐடி வசம் ஒப்படைத்தனர். இதன்பின்னர் அவரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அவர் தமிழகம் அழைத்து வரப்படுகிறார்.

Views: - 173

0

0