ரவுடியை பிடிக்க முயன்ற போது காவலர் படுகொலை..! துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இரங்கல்

18 August 2020, 10:20 pm
O panneerselvam - Online Tamil News
Quick Share

சென்னை: காவலர் படுகொலை குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார்.

ரவுடியை பிடிக்கச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு வீசி காவலர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு நடத்த டி.ஜி.பி.திரிபாதி தூத்துக்குடி விரைகிறார்.

இந் நிலையில் காவலர் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டை கொலை வழக்கு குற்றவாளியை காவலர்கள் கைது செய்ய விரைந்த போது குற்றவாளி நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்திருக்கும் காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த காவலர் நலமுடன் மீண்டுவர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.