அதிமுகவில் மட்டுமல்ல… நீதிமன்றத்திலும் ஓபிஎஸ்-க்கு தோல்விதான்… திண்டுக்கல் சீனிவாசன் கணிப்பு..!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 7:34 pm
Quick Share

நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடரும் வழக்குளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து, ஈபிஎஸ் அனைத்திலும் வெற்றி பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை – புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை சந்தித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவினரை அண்மையில் அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், கடந்த 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற நாளன்று அதிமுக தலைமையகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அராஜகத்தை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக தலைமையகத்திற்கு பாதுகாப்பு கேட்ட நிரபராதிகள் 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளாகவும் புகார் தெரிவித்தார். அதிமுகவின் வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்ய கூடாது என வங்கிக்கு ஓபிஎஸ் அளித்துள்ள கடிதம் குறித்த கேள்விக்கு, சட்டம் அதன் வேலையை செய்யும் என திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.

நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் ஓபிஎஸ் தொடர்ந்து ஒவ்வொன்றாக தோல்வியை சந்தித்து வருகிறார் என்றும், ஈபிஎஸ் வெற்றி பெற்று வருகிறார் என்றும், இதிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது நாடகம் நடந்து வருகிறது என்றும், விரைவில் முடிந்து விடும் என்றார்.

தீபா போன்று பிறரும் தங்களை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர் என ஓபிஎஸை மறைமுகமாக சாடிய திண்டுக்கல் சீனிவாசன், யார் யாரை நீக்கியது செல்லும், யாரிடம் கட்சி உள்ளது என்பதை பொதுகுழுவில் பார்த்தீர்கள் எனவும், 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்ட செயலாளர்களை தவிர்த்து பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளதாக தெரிவித்தார்.

தர்மத்தின் விதிப்படி அனைத்தும் நன்றாக நடந்து தர்மம் வெல்லும் எனவும் கூறினார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சட்டப்படி தேர்வாகி நிரந்தர பொதுச் செயலாளராக இருப்பார் என தெரிவித்தார்.

அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனவும், கல் எரிந்தது யார், அரிவாளால் வெட்டியது யார் என வீடியோ ஆதாரங்கள் உள்ளது என்றும், யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது எனவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Views: - 467

0

0