சென்னை உயர்நீதிமன்றத்தில் சோதனை அடிப்படையில் நேரடி விசாரணை : நீதிபதிகள் நிர்வாக குழு முடிவு..!

2 September 2020, 12:04 pm
Quick Share

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்-7 ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்கப்படும் என, மூத்த நீதிபதிகள் 7 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் அன்று முதல் நேரடி விசாரணை நடைபெறும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் இருந்து, கடந்த 5 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. முதன்மையான வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வரும் செப்-7 ஆம் தேதிமுதல் 2 வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் நீதிமன்றத்தில் நேரடி விசாரணையை நடத்த நீதிபதிகள் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், காலையில் 3 அமர்வுகளும் மாலையில் 3 அமர்வுகளும் என நாள் ஒன்றுக்கு 6 அமர்வுகள் மட்டும் நேரில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன. இந்த சூழலில், வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய முதன்மை நீதிபதிகளுக்கு நிர்வாக குழு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்ற பணிகள் குறித்து செப்டம்பர் 22-ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.

Views: - 7

0

0