அரைகுறை ஆடை என விமர்சித்த திமுக நிர்வாகி.. படையுடன் வந்த சட்ட மாணவி!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2025, 6:59 pm
கோவை நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜனனி என்ற இளம் பெண் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார் மேலும் திராவிட கழக கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அவர் நிகர் பறை இசை குழு என்ற அமைப்பு மூலம் திராவிட இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் பறை இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பூ மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற கலை பயிற்சி பட்டறை ஒன்றில் பங்கேற்ற ஜனனி பின்னர் தனது நண்பர் ஒருவருடன் பூ மார்க்கெட் சென்றுள்ளார்.
அங்கு தனது செல்போனை நண்பரிடத்தில் கொடுத்து தன்னை வீடியோ எடுக்குமாறு கூறிய நிலையில் அவரும் பூ மார்க்கெட்டில் பூக்கள் முன்பாகவும் கடைகள் முன்பாகவும் நின்று வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் கூட்டம் அதிகம் உள்ள நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டாம் என திமுக நிர்வாகி ஒருவர் அறிவுறுத்தியுள்ளாராம்.
அதற்கு ஜனனி பூ மார்க்கெட் உங்களுடையதா எதற்காக எடுக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்கவே வியாபாரிகளில் ஒரு சிலர் இதுபோன்று அரைகுறை ஆடைகளுடன் இங்கு வந்து வீடியோ எடுக்கக் கூடாது என்றும் இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் வந்து செல்வதால் இது போன்ற வீடியோக்கள் எடுத்து மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காதீர்கள் என்றும் கூறியுள்ளனர்.
அப்போது வியாபாரிகளின் கருத்துக்களை கேட்ட ஜனனி மற்றும் அவரது நண்பர் இருவரும் ஆவேசத்துடன் அங்கிருந்த வியாபாரிகளிடம் தனது ஆடை குறித்து ஆபாசமாக பேசாதீர்கள் ஆடை அணிவது எனது உரிமை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று இளம் பெண் ஜனனி திராவிட இயக்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் தனது ஆடை குறித்து அவதூறு பேசி தன்னை தரக்குறைவாக நடத்திய பூ மார்க்கெட் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தான் பூ வாங்குவதற்காக பூ மார்க்கெட் செல்லவில்லை என்றும் கலை பயிற்சி பட்டறையில் பங்கேற்று விட்டு சில புகைப்படங்கள் எடுப்பதற்காகவே சென்றேன் என கூறினார்.

மேலும் அங்கிருந்த வியாபாரிகள் தனது ஆடை குறித்து தரக்குறைவாக பேசி பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் தந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்து தற்போது ஏன் புகார் அளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் வந்த பின்பு புகார் அளித்துக்கொள்ளலாம் என இருந்ததால் தாமதமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ஒவ்வொரு விவாதங்களிலும் திராவிட அமைப்பை சேர்ந்தவர்கள் திமுக ஆட்சியில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இருப்பதாக ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் திமுக நிர்வாகியும் திராவிடர் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வாக்குவாதம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
