சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபடும் திமுக பிரமுகர்..? தடுத்து நிறுத்துமா மாவட்ட நிர்வாகம்..? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 7:06 pm
Quick Share

தூத்துக்குடி அருகே சட்ட விரோத மணல் கொள்ளையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஈடுபட்டு வருவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதிகளில் தனியார் பட்டா நிலங்களில் இருந்தும், அரசு புறம்போக்கு இடத்திலும் சட்டவிரோதமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு சரள் கொள்ளை இரவும், பகலும் லாரிகளில் கடத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கருங்குளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டி சரள் மண் கடத்தி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசிடம் இருந்து எந்த ஒரு அனுமதி சீட்டும் பெறாமல் சரள் மண்ணை கொள்ளையடித்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பருவநிலை காலங்களில் மழை நீர்வரத்து சரியாக வரமுடியாமல், ஒரே இடத்தில் தேங்கி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்றும், உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?, மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிறப்பு கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு சட்ட விரோத செயல்பாடுகளை தடுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், சிறு கனிம விதிகளின் படியும், சட்ட விரோதமாக சரள் மண் திருடும் கும்பல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

Views: - 221

0

0