சி.பி. ராதாகிருஷ்ணன் Vs திருச்சி சிவா? சூடு பிடிக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2025, 2:35 pm
துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலயில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் துணை தலைவர் தேர்வும் செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து என்டிஏ கூட்டணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது கொங்கு மண்டலத்தை பாஜக தன்வசப்படுத்த என கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி பாஜக சரியான வியூகம் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதே போல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்றோர் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சற்றும் எதிர்பாரா விதமாக, எடப்பாடி பழனிசாமியும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என திமுகவுக்கு மறைமுக கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக திருச்சி சிவாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி சிவா திமுகவின் விசுவாசியாகவும், பல ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இதனால் அவரை ஒரு மனதாக தேர்வு செய்ய இன்று இந்தியா கூட்டணி சார்பாக மாலை ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், யார் வெற்றி பெறுவார், யாருக்கு அதிகம் ஆதரவு என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு வேட்பாளர்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடியரசு துணை தலைவர் தேர்தல் சூடுபிடித்துள்ளது.
