மாணவர்கள் விஷயத்தில் திமுக துரோகம் இழைத்துள்ளது : அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2021, 11:12 am
Tahalavai Sundaram - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்த திமுக மாணவர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக மாணவர்களுக்கு துரோகம் செய்வதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டி உள்ளார்.

நீட் தேர்வு ரத்து என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர்களாக இருந்த ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஜனாதிபதிக்கு பல மனுக்கள் எழுதி அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியான நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்வை வைத்து அரசியல் பேசிய திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்ற பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் தங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்றும் தற்போது குறுகிய காலத்தில் நீட் தேர்வு ரத்து என்பது நடக்காத காரியம் என முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி வருகின்றனர்.

இவர்கள் வரும் ஐந்து ஆண்டு காலமும் இதையேதான் பேச போகிறார்கள். அவர்களை பொருத்தவரை நீட் தேர்வு குறித்த அவர்களின் பேச்சு வரும், ஆனால் வராது என்ற வடிவேல் பாணியில் மட்டுமே இருக்கும் என்றும் மாணவர்கள் விஷயத்தில் துரோகம் செய்த திமுக எத்தனை முறை ஆட்சி கட்டிலில் இருந்து கொண்டு நீட் வராது என கூறினாலும், அதனை ரத்து செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

நீட் தேர்வு நடைபெறும் வரை அமைதியாக இருந்து விட்டு இன்று சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரப்படுவதாக கூறி மீண்டும் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அதற்கு திமுக அரசுக்கு திராணியும் கிடையாது திறமையும் கிடையாது அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டம் இது.

அந்த சட்டத்திற்கு எதிராக மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றுமானால், மத்திய அரசு சட்டமா? மாநில அரசு சட்டமா? என்று கேட்டால் மத்திய அரசின் சட்டம் தான் பெரியது. நாட்டு மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசுக்கு நிகராக எந்த அரசும் கிடையாது என திமுகவிற்கு கடும் கண்டனத்தை முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

Views: - 408

1

0